காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, சென்னையில் படித்து வருகிறார். வழக்கம்போல் காஞ்சிபுரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, அயர்ந்து தூங்கியிருந்த மாணவிக்கு பின்புறம் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ச்சியடைந்த மாணவி உடனடியாக பஸ் டிரைவரிடம் புகார் தெரிவித்தார். மதுரவாயல் அருகே வந்தபோது பேருந்தை நிறுத்திய டிரைவர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் (26) என்பதும், மத்திய வேளாண் துறையில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
தற்போது கைதான ராகேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
