சுயநலமும் அவசரமும் நிறைந்த இந்த நவீன உலகில், முன்பின் தெரியாத ஒரு பச்சிளம் குழந்தையின் தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகப் பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் ஒருவர் காட்டிய மனிதாபிமானம் மற்றும் அக்கறை, ஒட்டுமொத்த இணையவாசிகளின் இதயங்களையும் உருக வைத்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த நிவேதிதா ராய் என்ற தாய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவம், தற்சமயம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. பகல் நேரத்தில் தனது குழந்தைக்கு தேவையான டயப்பர்களை ஆர்டர் செய்ய மறந்துவிட்டதை இரவில் உணர்ந்த நிவேதிதா, அவசரமாக நள்ளிரவு 10 மணிக்கு ஃபிளிப்கார்ட் நிமிடங்கள் மூலம் ஆர்டர் செய்துள்ளார்.
10.30 மணிக்கு அந்தப் பார்சலை எடுத்துக்கொண்டு நிவேதிதாவின் வாசலுக்கு வந்த டெலிவரி ஊழியர், வழக்கம்போல வாசலில் இருக்கும் காலிங் பெல்லை அடிக்காமல், அதற்குப் பதிலாக நிவேதிதாவின் மொபைல் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு மிகவும் கனிவான குரலில், “மேடம், தயவுசெய்து வெளியே வந்து கதவைத் திறங்கள்” எனக் கேட்டுள்ளார். இதனால் ஆச்சரியமடைந்த நிவேதிதா வெளியே வந்து, “ஏன் காலிங் பெல் அடிக்காமல் போனில் கூப்பிட்டீர்களா?” என்று கேட்ட போது, அந்த ஊழியர் புன்னகைத்தபடியே, “ஆர்டரில் டயப்பர் இருப்பதைப் பார்த்தேன்.
அதனால் வீட்டில் சிறிய குழந்தை இருக்கும் என்றும், அந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் என்றும் நினைத்தேன். பெல் அடித்தால் குழந்தையின் தூக்கம் கலைந்துவிடும் என்பதால் தான் உங்களுக்குத் தொலைபேசி செய்தேன்” என்று பதிலளித்துள்ளார். முன்பின் பார்த்திராத ஒரு குழந்தையின் அமைதிக்காக அந்த ஊழியர் காட்டிய இந்த அசாத்தியப் பரிவு, தன்னை ஆழமாக உலுக்கிவிட்டதாக நிவேதிதா, “இந்த அவசர உலகில்யாரோ ஒரு நபர், என் குழந்தையைப் பற்றி ஒரு கணம் யோசித்திருக்கிறார்.
View this post on Instagram
“>
முன்பின் தெரியாதவர்கள் செய்யும் சிறிய கருணைச் செயல்கள் தான் நம் வாழ்வில் என்றும் நிலைத்திருக்கும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். “தூங்கும் குழந்தையின் அருமை பெற்றோர்களுக்கு மட்டுமே தெரியும்” என்றும், “அந்த மனிதரின் நற்குணமே இதற்குச் சான்று” என்றும் இணையவாசிகள் பலரும் இந்த டெலிவரி ஊழியருக்குத் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வாரி இறைத்து வருகின்றனர்.
