நாகர்கோவில் அருகே சரலூர் பகுதியில் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில், டெம்போ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் சரலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40), டெம்போ டிரைவர். இவர் கடந்த இரவு தனது நண்பர் மணிகண்டன் (29) மற்றும் நண்பர்களுடன் இணைந்து, அப்பகுதியில் ஊர் மக்கள் நடத்திய பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த செந்தூரான் நகரைச் சேர்ந்த தொழிலாளி முகேஷ் கண்ணன் (26) என்பவருக்கும், ரமேஷ் தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அங்கிருந்த ஊர் மக்களும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரும் அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சம்பவம் முடிந்து முகேஷ் கண்ணன் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர், கலை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ரமேஷும், மணிகண்டனும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் முகேஷ் கண்ணன் வீட்டின் அருகே சென்றபோது, மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த முகேஷ் கண்ணன், வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து இருவரையும் சரமாரியாக வெட்டினார். இந்தத் தாக்குதலில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயமடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மணிகண்டனுக்கு தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டு விழுந்தது.
தகவலறிந்து வந்த கோட்டார் போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து ரமேஷின் சகோதரர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து முகேஷ் கண்ணனை கைது செய்தனர். “ரமேஷும் மணிகண்டனும் மதுபோதையில் தன்னிடம் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் அவர்களை வெட்டியதாக” முகேஷ் கண்ணன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பொங்கல் விழாவில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
