உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று மிகச்சிறப்பாகத் தொடங்கியது. வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டார்.

இன்று காலை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார். வழக்கம்போல, முதலாவதாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 1000-க்கும் மேற்பட்ட காளைகளும், அவற்றை அடக்கத் துடித்த மாடுபிடி வீரர்களும் களத்தில் இறங்கினர்.

போட்டியைக் நேரில் கண்டு ரசிப்பதற்காக வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் வழிநெடுகிலும் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கேலரியில் அமர்ந்து வீரர்களின் வீரதீரச் செயல்களைப் பார்வையிட்ட முதல்வர், சிறப்பாகச் செயல்பட்ட ஒரு காளையின் உரிமையாளருக்குத் தனது கையால் தங்க மோதிரத்தை அணிவித்து கௌரவித்தார்.

ஜல்லிக்கட்டு வீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் இதோ:

அரசுப் பணி: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும்.

துறை ஒதுக்கீடு: வெற்றி பெறும் வீரர்களுக்குக் கால்நடை பராமரிப்புத் துறையில் பணி நியமனம் வழங்கப்படும்.

பயிற்சி மையம்: ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவும், காயமடைவோருக்குச் சிகிச்சை அளிக்கவும் அலங்காநல்லூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

“ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது தமிழர்களின் அடையாளம். வீரர்களின் வீரத்தைப் போற்றும் வகையில் இந்த அரசுப் பணி அறிவிப்பு வெளியிடப்படுகிறது இன்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.