அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.பி. உதயகுமார், தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: போதை கலாச்சாரம் காரணமாக பள்ளி மாணவர்கள் கடுமையாக சீரழிந்து வருகின்றனர். ஆனால், இதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் முதல்வர் எந்தவிதமான உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, தமிழ்நாட்டில் குடும்பம் ஒன்றுக்கு ஒருவர் குடிக்கு அடிமையாகும் நிலை உருவாகியுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக வெளிவரும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. பள்ளிகளுக்கு அருகாமையிலேயே போதைப்பொருள் விற்பனை அதிகரித்து, போதை கலாச்சாரம் தலைவிரித்தாடி வருகிறது. இதன் விளைவாக, சாதிய எண்ணங்களும் மாணவர்களிடையே வளர்ந்து, அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றன.

மேலும் தமிழ்நாட்டில் நிலவும் போதை கலாச்சாரம் உள்ளிட்ட சமூக அவலங்கள் மாறி, ஒரு விடிவுக் காலம் பிறக்க வேண்டும் என்றால், 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைவது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.