தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 18 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மட்டுமே குழந்தை பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதற்கான காரணங்களை நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த 1990-ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் குழந்தை பெறுதல் என்பது குடும்ப வாழ்க்கையின் இயல்பான அம்சமாகவே கருதப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் விரைவில் கர்ப்பம் தரிப்பது, இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்வது என்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.

பெண்களின் கல்வித் தரம் கணிசமாக உயர்ந்துள்ளதும், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் முக்கிய மாற்றமாகக் காணப்படுகிறது. மேலும் திருமண வயது உயர்ந்துள்ளதால், குழந்தை பெறும் காலம் இயல்பாகவே தள்ளிப்போகிறது. அதே நேரத்தில், குழந்தை வளர்ப்பில் கல்வி, சுகாதாரம், எதிர்கால வாழ்க்கைத் தரம் ஆகியவற்றுக்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ‘நாம் இருவர் – நமக்கு ஒருவர்’ என்ற மனநிலை சமூகத்தில் வலுப்பெற்றுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும், குடும்ப நலத் திட்டங்கள், கருத்தடை வசதிகள், மகப்பேறு குறித்த விழிப்புணர்வு சேவைகள் ஆகியவை தமிழகத்தில் பிற மாநிலங்களை விட முன்னதாகவும் தீவிரமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டதும் பிறப்பு விகிதம் குறைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. மேலும் நகரமயமாக்கல், கல்வி தொடர்பான கடும் போட்டி, வேலைவாய்ப்பு அழுத்தம் போன்றவை தமிழகத்தில் அதிகமாக இருப்பதும் குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன என நிபுணர்கள் தெரிவித்தனர்.