தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள். அதன் பிறகு தற்போது புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அவர்களும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்ததோடு விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை பணம் வரவு வைக்கப்படும்.அந்த வகையில் இந்த மாதமும் மகளிர் உரிமைத்தொகை பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில் பொங்கல் பண்டிகை வருவதால் அதற்கு முன்னதாகவே பணம் வங்கி கணக்கில் வந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜனவரி 10-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தற்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு 1000 ரூபாய் வழங்கப்படாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில் மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
