தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். கண்டிப்பாக விஜயின் அரசியல் வருகை திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது. முதல் மாநாட்டின் போது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என கூறி நேரடியாகவே கூட்டணிக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடித்துவரும் நிலையில் மார்ச் மாதம் ஷூட்டிங் நிறைவடைவதால் அதன் பிறகு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு மாவட்ட செயலாளர்களை நியமிக்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது திமுகவுக்கு தான் பிரச்சனை என்று பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகிறது. நடிகர் விஜய் திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்துள்ள நிலையில் அதிமுகவை மட்டும் விமர்சிக்கவில்லை.
இதன் காரணமாக இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் பின்னர் அதனை தமிழக வெற்றிக்கழகம் மறுத்தது. இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் விஜயின் சுற்றுப்பயணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், விஜயின் அரசியல் வருகையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வராது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இருக்கும் வாக்குகளை யாராலும் பிரிக்க முடியாது. அதிமுகவின் வாக்கு வங்கிக்கு விஜயால் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் திமுகவின் வாக்கு வங்கி கண்டிப்பாக உடையும். மேலும் விஜயின் அரசியல் வருகையால் திமுகவின் ஓட்டுகள் உடையுமே தவிர அதிமுகவுக்கு எள்ளளவும் பாதிப்பு கிடையாது என்று கூறினார்.
