தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்காக கட்சிகள் தயாராகி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளும் பரபரப்பாக நடைபெறுகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இன்னும் 6 மாதத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் தற்போது தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் கூட்டணி ஒப்பந்தத்தின்படி தங்களுக்கு நாடாளுமன்ற எம்பி சீட் கிடைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நாங்க அப்படி சொல்லவே இல்ல எம்பி சீட் கொடுக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தார். இதன் காரணமாக அதிமுக மற்றும் தேமுதிக இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அதனை மறுத்தார்.

இந்நிலையில் தேமுதிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பாலமுருகன் நேற்று  அரியலூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டணி ஒப்பந்தத்தின்படி அதிமுக வெற்றி பெற்றால் பிரேமலதா விஜயகாந்துக்கு  துணை முதல்வர் பதவி தருவதாக அதிமுக சொன்னதாக கூறினார்.

அதாவது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் பிரேமலதா விஜயகாந்த் துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம் .எனவே இதற்காக தற்போது இருந்தே  நம்முடைய கட்சிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அதிமுக கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் துணை முதல்வராக போகிறார் என்று வந்த தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.