மத்தியப் பிரதேசத்தின் மைஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், குடியரசு தினத்தைக் கொண்டாட வந்த மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை இப்போது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தினச் சிறப்பு மதிய உணவை மாணவர்களுக்குத் தட்டுகளில் வழங்காமல், பழைய நோட்டுப் புத்தகப் பேப்பர்களில் வைத்து வழங்கியுள்ளனர். மாணவர்கள் அந்தப் பேப்பர்களில் உணவை வைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளது. “நாட்டின் எதிர்காலம் என்று சொல்லப்படும் மாணவர்களுக்கு ஒரு தட்டு கூட கொடுக்க முடியாதா?” என்று நெட்டிசன்கள் அந்தப் பள்ளியின் நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
गणतंत्र दिवस के दिन बच्चों को किताबों के पन्नों पर हलवा पूरी परोसी गई ,
नया भारत , ताकतवर भारत , विश्वगुरु 🔥
📍 मैहर, मध्यप्रदेश pic.twitter.com/PqYb6VyNeo— खुरपेंच (@khurpenchh) January 27, 2026
இந்தச் சம்பவம் அரசியல் ரீதியாகவும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆளும் பாஜக அரசைச் சாடிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கீதா சர்மா, “இதுதான் உங்களின் நல்லாட்சியா?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு சம்பவம் ஷீயோபுர் பகுதியில் நடந்த நிலையில், மீண்டும் அதே தவறு நடந்திருப்பது அதிகாரிகளின் மெத்தனத்தைக் காட்டுகிறது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குடியரசு தின விழா அன்று மாணவர்களுக்கு இப்படி ஒரு அவமரியாதை நடந்திருப்பது பலரையும் வேதனையடையச் செய்துள்ளது.
