மகாராஷ்டிரா மாநிலத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆசிரியர்களே மாணவர்களுக்கு விடைகளைச் சொல்லிக் கொடுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக ‘ChatGPT’ போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு விடைகள் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக பீடு (Beed) மாவட்டத்தில் உள்ள சௌசாலா தேர்வு மையத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர்களே நேரடியாகத் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில இடைநிலை மற்றும் உயர்நிலை கல்வி வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் தொடர்புடைய 81 ஆசிரியர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து உத்தரவிட்டுள்ளது. “தேர்வின் புனிதத்தைக் கெடுக்கும் எந்தச் செயலையும் பொறுத்துக்கொள்ள முடியாது” என வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது அடுத்தகட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.