மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில், 18 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் வழிமறித்து, அவரை மாட்டுச் சாணியைத் தின்னச் சொல்லி கட்டாயப்படுத்தித் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராட்டில் இருந்து மும்பைக்கு எருமைகளை ஏற்றிச் சென்ற லாரியில் கிளீனராகப் பணியாற்றிய அந்த இளைஞரை, ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் ஒரு கும்பல் மிரட்டியுள்ளது. தன்னிடம் முறையான ஆவணங்கள் இருந்தும், அந்த கும்பல் தன்னைக் கீழே இழுத்துப்போட்டு அடித்ததோடு, மத ரீதியிலான வசவுகளை வீசி இழிவுபடுத்தியதாக அந்த இளைஞர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

​இந்தக் கொடூரச் செயலை அந்த கும்பலே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளது. அதில் அந்த இளைஞரை வலுக்கட்டாயமாகச் சாணியைத் தின்ன வைப்பதும், மத கோஷங்களை எழுப்பச் சொல்லி மிரட்டுவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அபேகாவ்ன் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், இதுவரை முறையான எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட இளைஞர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.