2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மார்ச் 8-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தோல்வியால் துவண்டுள்ள சில அணிகளில் கேப்டன் மாற்றத்திற்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகாவின் பதவி தற்போது ஊசலாட்டத்தில் உள்ளது. இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு மற்றும் சல்மானின் தனிப்பட்ட ஃபார்ம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறினால், சல்மான் நீக்கப்பட்டு மீண்டும் ஷதாப் கான் வசம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், கேப்டன் சூர்யகுமார் யாதவின் பதவிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரின் சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தியா அரையிறுதிக்கு முன்னேறத் தவறினால், தலைமை மாற்றத்தைப் பற்றி பிசிசிஐ (BCCI) ஆலோசிக்கக்கூடும். மேலும், சூர்யகுமாருக்கு தற்போது 36 வயதாவதால், அடுத்த உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

2009-க்குப் பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்தது. கேப்டன் மிட்செல் மார்ஷ் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டாலும், அவரது தொடர்ச்சியான காயம் மற்றும் உடற்தகுதி அணியைப் பாதித்துள்ளது. 34 வயதாகும் மார்ஷுக்குப் பதில், எதிர்காலத் திட்டங்களுக்காக புதிய கேப்டனைத் தேடும் பணியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது.

தொடரை இணைந்து நடத்தும் இலங்கை அணி, சூப்பர்-8 சுற்றில் ஒரு வெற்றிகூட பெறாமல் வெளியேறியது. இதனால் கேப்டன் ஷனகாவின் தலைமைப் பண்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த உலகக்கோப்பையில் அரையிறுதி வரை சென்ற ஆப்கானிஸ்தான், இந்த முறை முதல் சுற்றிலேயே வெளியேறியது ரஷீத் கானின் கேப்டன் பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக தொடக்க வீரர் இப்ராகிம் சத்ரான் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

உலகக்கோப்பை மகுடத்தை யார் சூடுவார்கள் என்பது ஒருபுறம் இருக்க, தொடர் முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டில் பல கேப்டன்களின் ‘சாம்ராஜ்யம்’ முடிவுக்கு வரும் என்பது மட்டும் உறுதியாகத்தெரிகிறது.