அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் இன்னும் குறையவில்லை. ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட்டு, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.
ஆனால் இதற்குச் செவிசாய்க்காத ஈரான், அமெரிக்காவின் மிரட்டலுக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்துள்ளது. இடையில் சமரசம் செய்ய முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஈரானின் பொருளாதாரம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த மோதல் போக்கு மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி வைக்க முயலும் ஈரானியப் படைகளைத் தாக்க அமெரிக்கக் கடற்படைக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளதால் நிலைமை மோசமடைந்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் சவூதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகள் மற்றும் எரிசக்தி திட்டங்கள் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்துவோம் என்று ஈரானின் துணை ஜனாதிபதி இஸ்மாயில் சகாப் இஸ்ஃபஹானி மிரட்டல் விடுத்துள்ளார்.
இரு நாடுகளும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாததால், எந்த நேரத்திலும் மீண்டும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றமான சூழலே நீடிக்கிறது.
