இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையே சமீபத்தில் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். நாட்டு மக்களின் அடிப்படை நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், சில கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக மட்டுமே இந்த ஒப்பந்தம் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் சதி வேலைகளுக்கு இந்தியப் பிரதமர் மோடி பலியாகிவிட்டதாகத் தெரிவித்த அவர், இது தேச நலனுக்கு எதிரானது என்றும் சாடினார்.bஇந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியச் சந்தைகள் அமெரிக்கப் பொருட்களால் ஆக்கிரமிக்கப்படும் என்றும், இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்களும் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“மக்களின் எதிர்ப்பையும் மீறி இத்தகைய ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவது ஆட்சியாளர்களின் மக்கள் விரோதப் போக்கையே காட்டுகிறது” என்று திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது மற்றும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரிச்சலுகை அளிப்பது போன்ற முடிவுகள் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், திருமாவளவனின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.