அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் நிபந்தனைகள் ஒருதலைப்பட்சமாகவும், நியாயமற்ற கோரிக்கைகளை கொண்டிருப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா கடந்த காலங்களில் இரண்டு முறை பேச்சுவார்த்தையின் போது தங்களை ஏமாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான், இனி அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குப் பணியப்போவதில்லை என்றும், தங்களின் சொந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போரை நிறுத்தப்போவதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஹோர்முஸ் ஜலசந்தி மீதான தங்களின் இறையாண்மையை சர்வதேச அளவில் அங்கீகரிக்க வேண்டும் என்பது ஈரானின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. ஈரான் தனது தரப்பிலிருந்து ஐந்து முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
அதில் தங்களின் தலைவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும், போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் மீண்டும் போர் ஏற்படாதவாறு உறுதியான சர்வதேச வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கும்.
பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வழியாக அமெரிக்கா தூது அனுப்பிய போதிலும், ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தையை மறுத்து வருகிறது. தங்களின் நிபந்தனைகள் ஏற்கப்படும் வரை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்கள் தொடரும் என ஈரான் ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
