அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து தீவை வாங்குவதில் மீண்டும் ஆர்வம் காட்டி வருவதோடு, அதைத் தற்காப்பு காரணங்களுக்காகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு, கிரீன்லாந்து விவகாரத்திலும் அமெரிக்கா இதேபோன்ற அழுத்தங்களைப் பிரயோகிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதற்குப் பதிலளித்த டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன், “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இத்தகைய மிரட்டல் தொனியிலான பேச்சுக்கள் ஒரு நெருங்கிய நட்பு நாட்டிற்கு அழகல்ல என்றும், சர்வதேச சட்டங்களின்படி மற்றொரு நாட்டின் இறையாண்மையில் தலையிட அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மேலும் பேசிய பிரடெரிக்சன், நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் ஒரு பகுதியான கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ ரீதியாகவோ அல்லது அதிகார ரீதியாகவோ அத்துமீற முயன்றால், அது நேட்டோ கூட்டமைப்பின் முடிவாகவே அமையும் என்று எச்சரித்துள்ளார்.
கிரீன்லாந்து தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதி என்றும், அதன் எதிர்காலத்தை அந்த நாட்டு மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆர்க்டிக் பகுதியில் நிலவும் கனிம வளங்கள் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் காரணமாக அமெரிக்கா இந்தத் தீவைக் கைப்பற்றத் துடிக்கிறது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகள் டென்மார்க்கிற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன, இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
