காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாஜக மற்றும் அதிமுகவின் அரசியல் செயல்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குறித்து கார்த்தி சிதம்பரம் பேசுகையில்,
“டி.டி.வி. தினகரன் மீண்டும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஏற்கனவே இரண்டு முறை தோல்வியைத் தழுவிய அவர், தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும், அந்தக் கட்சியை பாஜக கடித்துக் குதறிச் சாப்பிட்டுவிடும். தினகரன் எனக்கு நெருங்கிய நண்பர் என்ற முறையில் அவருக்கு இப்போதே ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்; அடுத்த தேர்தலில் ‘குக்கர்’ கட்சி காணாமல் போய், அது ‘தாமரை’யாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
பாஜக தமிழகத்தில் காலூன்றினால் இந்தியை வலுக்கட்டாயமாகத் திணிப்பார்கள். நமக்குத் தேவையில்லாத கலாச்சாரங்களை புகுத்துவார்கள். தங்களுக்கு நெருக்கமான அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் அமர்த்தி, மறைமுகமாக ஆட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்,” என்றார். அதிமுகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து கார்த்தி சிதம்பரம் சாடியதாவது, முன்பெல்லாம் அதிமுகவின் அதிகாரம் தமிழகத்தில் இருந்தது.
கூட்டணி குறித்துப் பேச வேண்டுமானால் டெல்லியில் உள்ள தலைவர்கள் சென்னைக்கு வந்து அதிமுக அலுவலகத்திற்கோ அல்லது ஜெயலலிதா வீட்டிற்கோ வந்து பேசுவார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதிமுகவின் உட்கட்சிப் பூசலாக இருந்தாலும் சரி, கூட்டணி முடிவாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் டெல்லிக்குச் சென்று தான் பேசி முடிக்கிறார்கள். அதிமுகவிடம் தற்போது சுயமரியாதை இல்லை; தன்னிச்சையாகச் செயல்படும் திறனையும் அந்தத் தலைமை இழந்துவிட்டது. எனவே, சுயமரியாதை அற்ற அந்த அணியைப் புறக்கணித்து காங்கிரஸிற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
