புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர்களும் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் சூழலில், மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  பிரசாரம் மேற்கொண்டார். அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு திரண்டிருந்த தமிழக வெற்றி கழக (டிவிகே) தொண்டர்கள் திடீரென ‘டிவிகே.. டிவிகே..’ என முழக்கமிட்டனர். தொடர்ந்து சீமானின் பேச்சிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டதால், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.

 

 

தனது பிரசார வாகனத்தில் இருந்து கோஷமிட்ட தொண்டர்களை நோக்கிப் பேசிய சீமான், மிகுந்த கோபத்துடன் அவர்களைச் சாடினார். “டீ விக்கிறியா? இங்க வந்து டீ வித்துட்டு போடா” எனச் சத்தமிட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது. ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர், கோஷமிட்ட நபர்களை நோக்கிப் பாய்ந்து அவர்களைத் தாக்க முயன்றனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

சலசலப்புகளுக்கு இடையே தனது உரையைத் தொடர்ந்த சீமான், தனது கட்சித் தொண்டர்களையும் தமிழக வெற்றி கழகத்தினரையும் ஒப்பிட்டுப் பேசினார். அவர் கூறுகையில், நாம் தமிழர் தம்பிகள் அறிவார்ந்த பிள்ளைகள் அமைதியானவர்கள். ஆனால், தேவையில்லாமல் கோஷமிட்டுப் பிரசாரத்தைக் குலைக்கப் பார்ப்பவர்கள் தற்குறிகள் மற்றும் கோமாளிகள். என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும் இந்தச் சம்பவத்தால் மேட்டுப்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. தேர்தல் நெருங்கும் வேளையில், இருவேறு கட்சித் தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.