தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் இடையே ‘வயது’ மற்றும் ‘உடல்நிலை’ குறித்த காரசாரமான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. ஆரணியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காட்பாடி தொகுதி நிலவரம் குறித்துப் பேசுகையில் அமைச்சர் துரைமுருகனை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது,

“கடந்த 2021 தேர்தலின் போது, இதுவே தனது கடைசித் தேர்தல் என உருக்கமாகப் பேசி துரைமுருகன் வாக்குகளைப் பெற்றார். இதனால் அதிமுக வேட்பாளர் ராமு மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தார். ஆனால், இப்போது மீண்டும் போட்டியிடுகிறார்.

அவருக்கு இப்போது 88 வயதாகிறது. அவரால் இப்போது சரியாக நடக்கக்கூட முடியவில்லை; யாராவது பிடித்துக் கொண்டால் தான் எழுந்து நிற்க முடிகிறது. இவ்வளவு வயது மூப்புடைய ஒருவரால் எப்படித் தொகுதி முழுவதும் சுற்றிச் சுழன்று மக்களின் குறைகளைக் கேட்க முடியும்? சட்டசபை உறுப்பினர் என்பவர் மக்களுக்காக ஓடி ஓடி உழைக்க வேண்டும். நான் அவரைத் தனிப்பட்ட முறையில் மதிக்கிறேன், ஆனால் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமுவுக்கு ஆதரவு திரட்டினார்.

காட்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த அமைச்சர் துரைமுருகனிடம், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குத் தனது பாணியில் கிண்டலாகவும் அதிரடியாகவும் பதிலளித்த துரைமுருகன், எடப்பாடி பழனிசாமி சொல்லும் பல பொய்களில் இதுவும் ஒன்று. எனக்கு நடக்க முடியவில்லை என்று அவர் கூறுகிறார். முடிந்தால் எடப்பாடி பழனிசாமியை என்னுடன் ‘நடைப்போட்டிக்கு’ வரச் சொல்லுங்கள். யார் வேகமாக நடக்கிறார்கள் என்று அப்போது பார்த்துவிடலாம்,” என்று சவால் விடுத்தார்.

மேலும் இந்தியாவிலேயே அதிகமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமையைப் பெறத் துடிக்கும் துரைமுருகனுக்கும், கடந்த முறை நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட அதிமுக வேட்பாளர் ராமுவுக்கும் இடையே காட்பாடியில் கடும் போட்டி நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமியின் ‘வயது மூப்பு’ விமர்சனமும், அதற்குத் துரைமுருகன் விடுத்துள்ள ‘நடைப்போட்டி’ சவாலும் தற்போதைய தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.