ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில், உயிரிழந்த தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த சுமார் 25,000 ரூபாய் பணத்தைப் பெறுவதற்காக, ஒரு நபர் அவரது எலும்புக்கூட்டைத் தோண்டியெடுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

சந்துரு மஜ்கி என்ற அந்த நபர், தனது சகோதரி பனா மஜ்கி இறந்துவிட்டதை வங்கி அதிகாரிகளிடம் நிரூபிக்கத் தேவையான இறப்புச் சான்றிதழ் இல்லாததால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

வங்கி அதிகாரிகள் ஆதாரங்களைக் கேட்டுத் தொடர்ந்து வற்புறுத்தியதால், வேறு வழியின்றி இடுகாட்டிற்குச் சென்று புதைக்கப்பட்ட உடலை எலும்புக்கூடாகத் தோண்டியெடுத்து அதை வங்கிக்கு ஆதாரமாகக் காட்ட முயன்றது காண்போரை உலுக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் இந்தியா பேசும் நாட்டில், ஏழை மக்கள் தங்களின் சொந்தப் பணத்தைப் பெறுவதற்கு இவ்வளவு கொடூரமான சோதனைகளைச் சந்திக்க நேரிடுவது அரசாங்கத்தின் தோல்வி என்று அவர் விமர்சித்துள்ளார்.

பெரும் கோடீஸ்வரர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் வங்கிகள், ஏழைகளிடம் மட்டும் ஏன் இவ்வளவு மனிதாபிமானமற்ற முறையில் நடக்கின்றன என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தற்போது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த நபருக்கு உதவ உத்தரவிட்டுள்ளது.