அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதி  பகுதிகளில் மக்களை நேரில் சந்திக்க உள்ளார். இதனை முன்னிட்டு, அந்த தொகுதியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்த ஆலோசனை கூட்டம் சிவகாசி வேலாயுதம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசும்போது உணர்ச்சிவெறிந்த தருணங்களை ஏற்படுத்தினார். “திமுக ஆட்சிக்கு வந்ததும் என்னை பொய் வழக்குகளால் மிரட்டினர். தனிச்சிறையில் இருந்தபோதும், சில அதிகாரிகள் என்னை அதிமுகவுக்கு எதிராக செயல்பட வற்புறுத்தினர். ஆனால் என் உயிரிருக்கும் வரை நானும், என் உண்மையும் இந்த கட்சியோடும் தான் இருக்கும். எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்,” என்று கண்ணீருடன் உருக்கமாகப் பேசிய அவர், “சிவகாசி தொகுதிதான் என்னை வளர்த்தது, அதனால்தான் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில்தான் போட்டியிட உள்ளேன்” என்றும் தெரிவித்தார்.

மேலும், “ராஜபாளையத்தில் எனக்கு எதிராக சதி செய்து தோற்கடித்தனர். ஆனால் எந்த சாதி, மதத்திற்கும் நான் எதிரி இல்லை. சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய திட்டங்களை திமுக அரசு தற்போது தங்கள் சாதனையாக விளம்பரப்படுத்துகிறது” என்றும் வலியுறுத்தினார். அவரது உரை முடிவில் தொண்டர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.