தமிழ்நாடு அரசு, கிராம பஞ்சாயத்துகளில் தொழில் மற்றும் வணிகம் மேற்கொள்பவர்களுக்கு கட்டாய லைசென்ஸ் பெற வேண்டும் என புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ‘தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் (லைசென்ஸ்) விதிகள் – 2025’ என்ற இந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, இனி கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் உள்ள டீக்கடை, சலவை கடை, இறைச்சி மற்றும் மீன் கடை, பழைய இரும்புப்பொருள் விற்பனை, கொரியர் சேவை, திருமண மண்டபம், தையல் நிலையம், அச்சகம் உள்ளிட்ட 119 தொழில்களும் லைசென்ஸ் கட்டாயமாக பெற வேண்டும். இதற்கான கட்டணமும், தொழிலின் வகை மற்றும் அளவை பொருத்து ரூ.500 முதல் ரூ.30,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விளக்கத்தில், பஞ்சாயத்து வருமானத்தை அதிகரிக்கவும், தொழில் சூழலை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவும் இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. லைசென்ஸ் இல்லாமல் தொழில் நடத்துவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவ்விதி உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
