மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விநாயக் மற்றும் கண்மணி தம்பதிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை பிறந்த நாளன்றே உயிரிழந்தது. அந்த அதிர்ச்சி இன்னும் நெஞ்சைத் துளைக்கும் நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கண்மணிக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது. பிறந்த ஒரு மாதத்தில் அந்த குழந்தை உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு பெற்றோருடன் வளர்த்துவரப்பட்டது.

இந்நிலையில் நேற்று, கண்மணி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது, குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திடுக்கிட்ட கண்மணியும், குடும்பத்தினரும் குழந்தையை உடனடியாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை வருகையின் போதே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி பெற்றோரிடமும், அக்கம் பக்கத்தவரிடமும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.