அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளானதைத் தொடர்ந்து, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் (எம்எல்ஏ) கனிமொழி சந்தோஷ் அதற்கு வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.
கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசியது தொடர்பான மூன்று புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அந்தப் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. “அரசு அதிகாரிகளைத் தனியாக வரவழைத்து எம்எல்ஏ ஆலோசனை நடத்தியது ஏன்?” என்றும், “எம்எல்ஏ மட்டும் மிகப்பெரிய சொகுசு சோபாவில் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே அரசு அதிகாரிகள் போதிய வசதிகள் இல்லாத பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டிருப்பது முறையா?” என்றும் பல தரப்பினரும் விமர்சித்து வந்தனர்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
“நான் அதிகாரிகளைச் சந்தித்தது எனது வீடு அல்ல; அது எனது ஜோதிட அலுவலகம். கடந்த பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களைச் சந்தித்து வந்த எனது பழைய அலுவலகம் அதுவாகும்.
எனது புதிய எம்எல்ஏ அலுவலகத்தின் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அலுவலகத்திற்கான வண்ணப்பூச்சு (பெயிண்டிங்) மற்றும் இதர உள்கட்டமைப்புப் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் எளிதாக வந்து என்னைச் சந்தித்து, தங்களது கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் அந்த அலுவலகம் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது.
எனது அன்பு மக்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு தகவல்…
பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம் இன்று வரை மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் சுமந்து நிற்கிறது. அந்த அலுவலகம் எனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான நினைவுகளை தாங்கி நிற்கும் ஒரு இடம்.… pic.twitter.com/ZebRnrG5jq— Kanimozhi Santhosh (@Kanimozhi_tvk) May 19, 2026
புதிய அலுவலகப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழக்கம்போல எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு வருகிறேன்.
தொடர்ந்து பேசிய அவர், எனக்கு மக்கள் சேவையே முதன்மையானது. அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும். புதிய எம்எல்ஏ அலுவலகம் முழுமையாகத் தயாரானவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து மக்களையும் அங்கு சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது பணிகள் நடைபெற்று வரும் தனது புதிய எம்எல்ஏ அலுவலகத்தையும் அவர் வீடியோவில் காண்பித்து விளக்கமளித்துள்ளார்.
மேலும் எம்எல்ஏ-வின் இந்தத் திடீர் விளக்க வீடியோ, சமூக வலைத்தள விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
