அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஆகியோருக்கு இடையே நேரடி பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு நிகழ வாய்ப்பில்லை என ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. முன்னதாக, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணித்து அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை நேரில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், அது தமக்குக் கிடைக்கும் பெருமை என்றும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவின் இந்த விருப்பத்தை முற்றிலும் நிராகரித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கமேனியின் மூத்த இராணுவ ஆலோசகர்கள், தற்போதைய சூழலில் அமெரிக்க அதிபரைச் சந்திக்கும் எண்ணம் எதுவும் ஈரானுக்கு இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஈரான் தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி இதுகுறித்துக் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தச் சந்திப்பு விருப்பம் உலகிற்கு ஒத்துவராத ஒன்று என விமர்சித்துள்ளார். மேலும், ஈரானின் புதிய உச்ச தலைவரின் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு, அவர் பொதுவெளியில் தோன்றுவதைத் தவிர்க்குமாறு பாதுகாப்பு முகமைகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையே, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் நீடிப்பதற்கு அதிபர் டிரம்ப் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள ஈரானிய அதிகாரிகள், இரு நாடுகளுக்கு இடையே உள்ள பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால், முடக்கப்பட்டுள்ள ஈரானின் 24 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தியில் விதித்துள்ள கடல்சார் தடைகளை நீக்க வேண்டும் என்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
