தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உட்பட 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், மே 21-ல் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 17-ஆம் தேதி அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்) ஒதுக்கப்பட்டன. இருப்பினும், இன்னும் 22 முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக, தற்போது பதவியேற்றுள்ள அமைச்சர்கள் சிலர், கூடுதலாக இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட துறைகளைக் கவனித்து வருகின்றனர். நிர்வாக நலனைக் கருதி, விடுபட்ட துறைகளுக்குப் புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கத்தில், கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, உயர்கல்வித் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகிய இரு முக்கிய துறைகள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே இடமளிக்கப்படும் என்றும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அ.தி.மு.க-வின் எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது குறித்து இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
மேலும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் விரிவாக்கம் என்பதால், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
