இந்தியாவில் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் படித்தொகைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும் நிலையில், தமிழ்நாட்டில் தற்போதைய புதிய அரசில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஊதியம் மற்றும் சலுகைகள் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு தற்போதும் நடைமுறையில் உள்ளது.

மேலும் 2024-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விதிமுறை திருத்தங்களின்படி, மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அடிப்படைச் சம்பளம் 30 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பல்வேறு படித்தொகைகள் மற்றும் இதர சலுகைகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு மாத ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, தமிழக முதல்-அமைச்சரின் ஒட்டுமொத்த மாதச் சம்பளம் 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாகும்; இதுதவிர அவருக்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வ இல்லம், வாகனம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எம்.எல்.ஏ. மாதச் சம்பளம் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

மேலும், அமைச்சர்களுக்குக் கூடுதலாக அரசு இல்லமும், காரும் வழங்கப்படுகின்றன. இவை மட்டுமன்றி, எம்.எல்.ஏ.க்களுக்கு இலவச மருத்துவ வசதி, ரெயில், பஸ் மற்றும் விமானப் பயணச் சலுகைகள், அலுவலக நிர்வாகப் படி மற்றும் சட்டமன்றக் கூட்டங்களில் பங்கேற்பதற்கான தினசரிப் படியாக 2,500 ரூபாய் வரையும் தனியாக வழங்கப்படுகிறது.