சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார், ஒரு உதவியாளர் மற்றும் ரூ. 75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், “திமுகவின் 59 எம்.எல்.ஏ.-க்களும் அரசு காரைப் பெறப்போவதில்லை; ஏழ்மை நிலையில் உள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார். அதேபோல, பாமக எம்.எல்.ஏ. கணேஷ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தளி இராமச்சந்திரனும் தாங்கள் அரசு காரைப் பெற விரும்பவில்லை என்றும், வாகனம் இல்லாத எளிய உறுப்பினர்களுக்கு மட்டும் கார்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்த அறிவிப்புக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஏழ்மையான சட்டமன்ற உறுப்பினர் அளித்த கோரிக்கையின் பேரில் தான் முதலமைச்சர் பொதுவான இந்த அறிவிப்பை வெளியிட்டு செவிசாய்த்தார் எனக் குறிப்பிட்டார். மேலும், கம்யூனிஸ்ட் மற்றும் எளிய உறுப்பினர்களிடம் வீடோ காரோ இல்லாத நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், “ஏற்கெனவே சொந்தமாகக் கார் வைத்திருக்கும் தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் அரசு காரைக் கேட்டு விண்ணப்பிக்க மாட்டார்கள்.

எதிர்க்கட்சித் தலைவருக்குச் சொந்தமாக 3 வீடுகள் இருந்தும் அவர் ஏன் அரசு பங்களாவில் தங்கியிருக்கிறார்? அவருக்குச் சொந்த வீடு இருப்பதால் பங்களா தர முடியாது என மறுக்க முடியுமா?” எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். இதற்கு உடனடி மறுப்புத் தெரிவித்துப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு, அரசுக்கு வீண் செலவை வைக்கக்கூடாது என்ற நல்நோக்கிலேயே கார் வேண்டாம் எனக் கூறுகிறோம் என்று தெளிவுபடுத்தினார்.

மேலும், “எங்களது வேட்புமனுவைச் சுட்டிக்காட்டிப் பேசுவதாக இருந்தால் தாராளமாக வழக்கு தொடருங்கள். அமைச்சர் சொந்த வீட்டில் வசித்தாலும் அதற்கு அரசு தான் வாடகை செலுத்துகிறது; எனவே, அவரும் அரசு வீடு வேண்டாம் என எழுதிக்கொடுக்கட்டும்” என அவையில் எதிர் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான வாகன வசதி தொடர்பான இந்த விவாதம், கட்சி எல்லைகளைத் தாண்டி பல்வேறு உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்துகளாலும், ஆளுங்கட்சி – எதிர்க்கட்சியினரின் பரஸ்பர குற்றச்சாட்டுகளாலும் அவையில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.