சமூக வலைதளங்களில் லைக்ஸும் வியூஸும் அள்ளுவதற்காக இளைஞர்கள் செய்யும் விபரீத சாகசங்கள் சில நேரங்களில் மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்றுவிடும் என்பதற்கு மற்றொரு சாட்சியாக ஒரு பயங்கரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு இளைஞர் சுவிம்மிங் பூலில் முதல் மாடி உயரத்திலிருந்து கீழே குதித்து ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கும் காட்சியைக் கண்டு பார்ப்பவர்களின் இதயம் பதைபதைக்க வைக்கிறது.
வீடியோவின் தொடக்கத்தில், அந்த இளைஞர் முதல் மாடியில் அமைந்துள்ள ஒரு பால்கனி பகுதியிலிருந்து சுவிம்மிங் பூலை நோக்கி குதிக்கத் தயாராக நிற்கிறார். அவரது நண்பர்கள் அருகில் நின்று இந்த சாகசத்தைத் தங்களது கேமராவில் பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாக ரீல்ஸ் போட வேண்டும் என்பதே இவர்களின் ஒட்டுமொத்த திட்டமாக இருந்துள்ளது.
ஆனால், அவர் குதித்த சில நொடிகளில் மொத்தக் காட்சியும் ஒரு கோர விபத்தாக மாறியது. அவர் எதிர்பார்த்தபடி நேரடியாகத் தண்ணீருக்குள் குதிக்காமல், அவரது ஜம்ப் டைமிங் தவறியதால் உடல் சுவிம்மிங் பூலின் காங்கிரீட் பக்கவாட்டுச் சுவரில் பலமாக மோதியது. இந்த மோதல் மிக விபரீதமாக இருந்ததால் அங்கிருந்த நண்பர்கள் அலறி அடித்து ஓடி வந்தனர்.
மோதலின் பலத்தினால் தண்ணீருக்குள் விழுந்த அந்த இளைஞருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. ஊடகத் தகவல்களின்படி, இந்த விபத்தில் அவரது எலும்புகளும் கடுமையாக உடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஜாலியாகச் சுற்றிக் கொண்டாட நினைத்த ஒரு ஸ்டண்ட், சில நொடிகளில் நரக வேதனையாக மாறியது.
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பலரும் இதுபோன்று முறையான பயிற்சியின்றி ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. சிறிய கவனம் சிதறினாலும் அது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது.
