சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார், உதவியாளர் மற்றும் ரூ. 75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், “திமுகவைச் சேர்ந்த 59 எம்.எல்.ஏ.-க்களும் அரசு காரைப் பெறப்போவதில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த முடிவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவையில் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மாநிலம் நிதி நெருக்கடியில் இருக்கும் சூழலில் திமுகவின் 59 எம்.எல்.ஏ.-க்களும் அரசு வாகனத்தைப் பெறப் போவதில்லை. வேட்புமனுத் தாக்கலில் உள்ள சொத்து விவரங்களின் அடிப்படையில், ஏழ்மை நிலையில் உள்ள பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே கார்களை அரசு வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஏழ்மையான சட்டமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையின் காரணமாகவே முதலமைச்சர் கார் வழங்கும் திட்டத்தை அறிவித்தார் என்றும், எளிய உறுப்பினர்களின் தேவையை உணர்ந்தே அரசு இம்முடிவை எடுத்தது என்றும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “எதிர்க்கட்சித் தலைவருக்குச் சொந்தமாக 3 வீடுகள் உள்ளன, அப்படியிருந்தும் அவர் ஏன் அரசு பங்களாவில் தங்கியிருக்கிறார்? அவருக்குச் சொந்தமாக பங்களா இருப்பதால் அரசு சார்பில் வீடு தர முடியாது எனக் கூற முடியுமா?” என்று கேள்வி எழுப்பி, உதயநிதியின் கருத்துக்குச் சட்டப்பேரவையில் கடுமையான பதிலடியைப் பதிவு செய்தார்.
