ஆன்லைன் மருந்து விற்பனை தளங்களின் கட்டுப்பாடற்ற வணிகம் மற்றும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (மே 20) நாடு முழுவதும் உள்ள மருந்து கடைகளை அடைத்து அதிரடி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த மாபெரும் போராட்டம் காரணமாகத் தமிழகத்தில் மட்டும் சுமார் 35,000 மருந்து கடைகள் நாளை திறக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மருந்து நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி, அநியாயமான தள்ளுபடி விலையில் மருந்துகளை விற்பனை செய்வதால் பாரம்பரிய மருந்து கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய நவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் போலியான மருத்துவப் பரிந்துரை சீட்டுகளை (Fake Prescriptions) உருவாக்கி, அதன் மூலம் ஆன்லைனில் போதை தரக்கூடிய மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தடையின்றி விற்கப்படுவதாகவும், இது பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.
இருப்பினும், இந்த வேலைநிறுத்தத்தின் போது அவசர கால மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் தடையின்றி கிடைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளை முன்கூட்டியே வாங்கி உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
