மராட்டிய மாநிலம் அமராவதியைச் சேர்ந்த ஃபைஸ்லா ஜபீன் என்ற புதுப்பெண்ணின் மரண வழக்கில், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடிய மாமனார் குடும்பத்தினரின் சதி அம்பலமாகியுள்ளது. நாக்பூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமான ஃபைஸ்லா, கடந்த மே 15 அன்று மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவரது கணவர் தரப்பில் இருந்து பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சோகமான சூழலில் ஃபைஸ்லாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால், அடக்கம் செய்யப்பட்ட பிறகு அவரது பெற்றோருக்குக் கிடைத்த 5 நொடிகள் கொண்ட ஒரு வீடியோவில், ஃபைஸ்லாவின் கழுத்தில் பலத்த காயங்கள் இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஃபைஸ்லாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மாவட்ட நீதிபதியின் அனுமதியைப் பெற்று, அடக்கம் செய்யப்பட்ட ஃபைஸ்லாவின் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இர்வின் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நடத்திய முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ஃபைஸ்லா மாரடைப்பால் இறக்கவில்லை என்பதும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் உறுதியானது.

இந்த அதிர்ச்சித் தகவலை அடுத்து, ஃபைஸ்லாவின் கணவர், மாமனார் மற்றும் மைத்துனர் ஆகிய மூவர் மீது காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் கொடூரக் கொலைக்கான பின்னணி வரதட்சணைக் கொடுமையா அல்லது வேறு ஏதேனும் குடும்பத் தகராறா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.