அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நிர்வாகிகளைத் தொடர்ந்து மிரட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். எங்களை அதிமுகவின் அடிப்படை மற்றும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியதாக அறிவித்தது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். இபிஎஸ்-ன் இந்த மிரட்டல் போக்குகளுக்கு அதிமுகவின் உண்மையான நிர்வாகிகள் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. திமுகவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க எடப்பாடி பழனிசாமி விரும்பினார். அவர் எடுத்த அந்த முடிவின் போதுதான், எங்களுக்கும் அவருக்கும் இடையே முதல்முறையாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பதைப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றி தோல்வி சகஜம் தான். தற்போது அதிமுக தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்தத் தோல்விகளை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. தேர்தலில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, ஆனால் அதுகுறித்து கட்சியில் விவாதிக்கக் கூட அவர் தயாராக இல்லை.

மேலும் கட்சியின் ஜனநாயகத்தைக் காக்க உடனடியாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். பொதுக்குழுவில் நேருக்கு நேர் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். கட்சியின் சட்டவிதிமுறைப்படி, ஐந்தில் ஒரு பங்கு (1/5) பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு எழுதிக் கொடுத்தால், தலைமை உடனடியாக சிறப்பு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். அவ்வாறு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கிய 30 நாட்களுக்குள் சிறப்பு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டியது கட்டாயமாகும். எனவே, பொதுக்குழுவைச் சந்திக்க இபிஎஸ் தரப்பு தயாராக வேண்டும். இவ்வாறு எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினர் கூட்டாகத் தெரிவித்தனர்.