தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைவர்களின் சமீபத்திய பேச்சுக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “எங்களுடைய மேடைகளில் நாங்கள் செய்த சாதனைகளையும், அதனால் பயனடைந்த மக்களின் தரவுகளையும் மட்டுமே முன்வைக்கிறோம். ஆனால், மறுபுறம் சொல்வதற்குச் சாதனையும் இல்லை, செயல்படுத்துவதற்கு முறையான கொள்கையும் இல்லாதவர்கள் ஆபாசமாகப் பேசி வருகிறார்கள்” என்று அவர் சாடியுள்ளார். இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலைத் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

​மேலும் பேசிய முதல்வர், “தமிழக மக்கள் வளர்ச்சியையும், விடியலையும் மட்டுமே தேர்வு செய்வார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆபாசமாகப் பேசுவதன் மூலம் எங்களை வீழ்த்திவிடலாம் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள்” என்று உறுதியாகத் தெரிவித்தார். திமுக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதைத் தங்களால் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். முதல்வரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அதிமுக – திமுக இடையே பெரிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.