தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தனது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் களத்தில் ஒரு புதிய சட்டச் சிக்கலைச் சந்திக்க நேரிடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு வேட்பாளர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்போது, தனது சொத்து விவரங்களுடன் தனது மனைவியின் சொத்து மற்றும் கடன் விவரங்களையும் பிரமாணப் பத்திரத்தில் (Affidavit) முறையாகக் குறிப்பிட வேண்டும். சங்கீதாவுடனான விவாகரத்து இன்னும் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்படாததால், விஜய்யின் வேட்புமனுவில் சங்கீதாவின் சொத்து விவரங்களைக் குறிப்பிடுவது கட்டாயமாகிறது.

​இருவருக்குமிடையே தற்போது சுமூகமான உறவு இல்லாத நிலையில், சங்கீதாவின் துல்லியமான சொத்து விவரங்களைப் பெறுவதில் விஜய்க்குச் சிக்கல்கள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை, சொத்து விவரங்களில் ஏதேனும் குளறுபடிகளோ அல்லது தகவல்கள் மறைக்கப்பட்டதோ தெரியவந்தால், தேர்தல் ஆணையம் விஜய்யின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ய அதிக வாய்ப்புள்ளது. இது தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த வேட்புமனுத் தாக்கல் விவகாரம், வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.