தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக – பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 30 முதல் 40 இடங்கள் வரை பாஜக கேட்டு வந்த நிலையில், தற்போது திடீர் திருப்பமாக பாஜக-விற்கு 27 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இட ஒதுக்கீடு குறித்த இறுதி முடிவை எடுக்கவும், தொகுதிகளை அடையாளம் காணவும் பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை (மார்ச் 19) சென்னை வருகிறார். நாளை நடைபெறும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நாளை மறுநாள் (மார்ச் 20) கூட்டணி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி வியூகம் குறித்து விவாதிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். 27 இடங்கள் என்பது உறுதி செய்யப்பட்டால், கடந்த முறையை விட பாஜகவிற்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளது என்றாலும், அவர்களின் எதிர்பார்ப்பை விட இது குறைவுதான் எனக் கூறப்படுகிறது. பியூஷ் கோயல் வருகைக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இன்னும் சில சிறிய கட்சிகளும் இணைய வாய்ப்புள்ளதால், தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
