தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் இந்த வாரம் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தற்போது நாமக்கலில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் விஜய் கிட்னி திருட்டை கையில் எடுத்தார். அதாவது நாமக்கல் கவிஞர் ராமலிங்கனாரின் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற கவிதையுடன் தன்னுடைய பரப்புரையை தொடங்கிய விஜய் திமுக எம்எல்ஏவின் மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடப்பதாக குற்றம் சாட்டினார்.

அதன் பிறகு அடுத்த வருடம் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு கிட்னி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார்.அதன் பிறகு தொடர்ந்து பேசிய விஜய் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை குறிப்பிட்டு அதை எல்லாம் நிறைவேற்றினீர்களா என்று கேட்டார். அதாவது இட ஒதுக்கீடு உரிமையை பெற்றுக் கொடுத்த நாமக்கலை சேர்ந்த சென்னை மாகாணத்தின் முதல் ஆளுநராக பதவியில் அமர்ந்த தமிழர் சுப்புராயனுக்கு மணிமண்டபம் கட்டிக் கொடுப்பதாக 456 வாக்குறுதியில் சொன்னது என்ன ஆச்சு அதை செய்தீர்களா.? வாக்குறுதி 50-ல் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானியங்கி கிடங்குகள் அமைக்கப்பட்டு அவை உலர் கலங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் அமைக்கப்படும்.

வாக்குறுதி 66-ல் கொப்பரை தேங்காய் விலை அரசே கொள்முதல் செய்து எண்ணெயை உற்பத்தி செய்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குறுதி 68-ல் நியாய விலை கடைகளில் நாட்டுச்சக்கரை மற்றும் வெல்லம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குறுதி 152 இல் போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். நாமக்கல்லில் முட்டை சேமிப்பு கிடங்கு மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை ஆண்ட கட்சியும் யோசிக்கவில்லை ஆளும் கட்சியும் யோசிக்கவில்லை.

திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் விசைத்தறி பெண்கள் தான் அதிகம் குறிவைக்கப்பட்டு கிட்னி திருட்டு நடந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படும் அதனை செய்வோம் என்றார்.