தெலுங்கானா மாநிலம் விகாராபாத் பகுதியில் சேலை வாங்கித் தர மறுத்ததில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஒரு பெண் தனது கணவரை கொலை செய்த பரபரப்பான சம்பவம்  நடந்துள்ளது. அதாவது விகாராபாதை சேர்ந்த குமார் (வயது 42), ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தவர். அவரது மனைவி ரேணுகா.

நேற்று விடுமுறை என்பதால் குமார் வீட்டிலிருந்தார். அப்போது, ரேணுகா, தமக்கு புதிய சேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு குமார் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது, கோபத்தினால் குமார் தனது மனைவியை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனால் மிகுந்த கோபமடைந்த ரேணுகா, வீட்டின் சமையலறையில் இருந்து மிளகாய் பொடியை கொண்டு வந்து கணவரின் கண்ணில் வீசினார். பின்னர் தனது புடவையை கழற்றி, குமாரின் கழுத்தில் சுழற்றி இறுக்கியதாக கூறப்படுகிறது. இதில் குமார் மூச்சுத்திணறி துடித்து உயிரிழந்தார்.

உடனே நடந்ததை உணர்ந்த ரேணுகா, கதறி அழுததாக தெரிகிறது. அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரேணுகாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இச்சம்பவம் அந்த  பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.