தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஒப்பந்த செவிலியர்களின் பணி நிரந்தரம் குறித்த முக்கியமான அறிவிப்பை இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, இதுவரை 3,783 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மீதமுள்ள செவிலியர்களும் அவர்களின் பணி மூப்பு அடிப்படையில் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

​பணி நிரந்தரம் குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர், காலிப்பணியிடங்கள் இருந்தும் வேலை வழங்கவில்லை என்றால் மட்டுமே அரசு மீது குறை சொல்ல முடியும் என்று குறிப்பிட்டார். தகுதியான அனைவருக்கும் உரிய முறையில் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நிதி நிலைமை மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் நடைபெறும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.