உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், உயிரிழந்த தனது 35 வயது மகளின் உடலை தகனம் செய்யாமல், கடந்த நான்கு மாதங்களாக ஒரு தந்தை வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஓய்வுபெற்ற எழுத்தரான உதய பானு பிஸ்வாஸ் என்பவரின் மகள் பிரியங்கா பிஸ்வாஸ், கடந்த டிசம்பர் மாதம் மஞ்சள் காமாலையால் உயிரிழந்துள்ளார். ஆனால், பாசத்தாலோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்டோ, தந்தை அவரது உடலை அடக்கம் செய்யாமல் வீட்டிலேயே வைத்துள்ளார்.
பிணத்தின் துர்நாற்றம் வெளியே தெரியாமல் இருக்க, உடல் மீது தொடர்ந்து பெர்பியூம் அடித்து மறைத்து வந்துள்ளார் உதய பானு. சில நாட்கள் மகளின் பிணத்துடனேயே அந்த வீட்டில் வசித்தவர், பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு ஹரித்வார் மற்றும் டேராடூனுக்குச் சென்றுள்ளார். நீண்ட நாட்களாக பிரியங்காவை காணாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், உதய பானுவை சந்தையில் வைத்து மடக்கிப் பிடித்தபோதுதான் இந்த உண்மை வெளியே வந்துள்ளது.
தகவலறிந்து வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது, அது ஒரு திகில் படம் போல காட்சியளித்துள்ளது. குப்பைகள் நிறைந்த அந்த வீட்டில், பிரியங்காவின் உடல் எலும்புக்கூடாகக் கிடந்துள்ளது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மகளின் மரணத்தை ஏற்க முடியாமல் இப்படிச் செய்தாரா அல்லது வேறு ஏதேனும் குற்றப் பின்னணி இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் உதய பானுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
