திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முதலாண்டு பிடிஎஸ் (BDS) மாணவர் நிதின் ராஜ், கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய ஆடியோவில், ஆசிரியர்கள் தன்னை ‘இடியட்’ என்று அழைத்து இழிவுபடுத்தியதாகவும், ஒரு குழுவாகச் சேர்ந்து மாணவர்களை ஆசிரியர்கள் அறையில் வைத்து மனரீதியாகத் தாக்குவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

​நிதினின் குடும்பத்தினர் மற்றும் அவரது நிறத்தை வைத்தும் ஆசிரியர்கள் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அவருடைய இன்டர்னல் மார்க்குகளை (Internal Marks) திட்டமிட்டே குறைத்து, அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியடையச் செய்வோம் என ஆசிரியர்கள் மிரட்டியதாக நிதின் அந்த ஆடியோவில் கூறியுள்ளார். வறுமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட நிதினின் தந்தை ஒரு பெயிண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

​இந்த விவகாரத்தில் கல்லூரி முதல்வர் டாக்டர் வினோத் மணி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மாணவனை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் உடற்கூறியல் துறைத் தலைவர் டாக்டர் எம்.கே. ராம் மற்றும் உதவிப் பேராசிரியர் டாக்டர் சங்கீதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஒரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.