தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ள, மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. அசோக் தன்வார் திருப்பூருக்கு வருகை தந்தார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி மேற்கொள்ளும் தயாரிப்புகளை பற்றி பேசிய அவர், “பீகார் மாநிலத் தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடக்கூடியவை அல்ல. தமிழக மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள். தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டோம்” என்றார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்குமா என்ற நிருபர் கேள்விக்கு, “கூட்டணி விவகாரத்தில் கட்சி தலைமை மட்டுமே முடிவு எடுக்கும்” என அசோக் தன்வார் தெரிவித்தார். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் ராகுல் காந்தி கூறியதன் காரணமாகவே கட்சி ஆரம்பித்தார் என்று ஒரு செய்தி பரவி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான கேள்விக்கு காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும் என்று அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
