உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், கழிப்பறை மற்றும் பாதுகாப்புச் சுவர் இல்லை எனக் கூறி மாணவிகளுக்குச் சேர்க்கை மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1957-ம் ஆண்டு முதல் இருபாலர் பயிலும் பள்ளியாக இது செயல்பட்டு வந்தாலும், தற்போது உட்கட்டமைப்பு வசதிகளைக் காரணம் காட்டி மாணவிகளை அனுமதிக்கப் பள்ளி நிர்வாகம் மறுத்து வருகிறது.
இது பெண் கல்விக்கு எதிரான பாகுபாடு எனப் பெற்றோர்கள் குற்றம்சாட்டியதுடன், மாணவிகளைத் தனியார் பள்ளிகளுக்குத் திசைதிருப்பவே இப்படி ஒரு நாடகத்தைப் பள்ளி நிர்வாகம் நடத்துவதாகப் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனது மகளுக்கு இடம் மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், ஒரு கழிப்பறை இருக்கையை (Toilet Seat) சுமந்து கொண்டு பள்ளிக்கு வந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
“வசதி இல்லை என்பதுதான் உங்கள் பிரச்சனை என்றால், இதோ இருக்கையை நானே கொண்டு வந்துவிட்டேன், இப்போது என் மகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்” என அவர் விடுத்த சவால் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
