பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட்டில், உதவி ஆய்வாளராக (ASI) பணியாற்றி வரும் சரப்ஜித் கவுர் என்பவர், தனது 5 வயது பேத்தியைக் கொளுத்தும் வெயிலில் வீட்டின் இரும்புக்கதவில் கை, கால்களைக் கட்டிப்போட்டு சித்திரவதை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழந்தையின் பெற்றோர் போர்ச்சுகலில் வசித்து வருவதால், பாட்டியின் பாதுகாப்பில் குழந்தை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், குழந்தை பல மணிநேரம் கதறி அழுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அந்தத் துயரக் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

​இந்த வீடியோ காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, ஃபரித்கோட் எஸ்எஸ்பி பிரக்யா ஜெயின் உடனடி நடவடிக்கை எடுத்து ஏஎஸ்ஐ சரப்ஜித் கவுரை பணியிடை நீக்கம் (Suspend) செய்துள்ளார். “பெண்களுக்கு உதவும் மையத்தில்” (Mahila Mitra) பணியாற்றி வந்த ஒரு அதிகாரியே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தக் குழந்தை மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.