விவசாயிகளுக்குப் பொதுவாகக் காட்டு விலங்குகளாலும், பறவைகளாலும் தான் பயிர்ச் சேதம் ஏற்படும். ஆனால், தற்போது அதைவிடக் கொடுமையாக ‘கண்டென்ட் கிரியேட்டர்ஸ்’ என்ற பெயரில் சுற்றித் திரியும் சிலரால் விவசாயிகளுக்குப் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
சூரியகாந்தி தோட்டம் ஒன்றில் புகுந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் அழகான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் எடுப்பதற்காகப் பயிர்களை மிதித்து நாசப்படுத்தும் வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை அழகாகப் பூத்துச் சிரிக்கும் சூரியகாந்தி மலர்களைக் காண முடிகிறது.
View this post on Instagram
ஆனால், அந்த அழகை ரசிப்பதை விட்டுவிட்டு, தங்களது சமூக வலைதளப் பக்கங்களுக்காக அந்தப் பயிர்களை மாடுகளைப் போல மிதித்துத் துவம்சம் செய்கின்றனர் இந்தக் கும்பல். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த நிலத்தின் உரிமையாளர், அவர்களை விலங்குகளை விரட்டுவது போலக் கத்தி விரட்டுகிறார்.
“முன்பெல்லாம் விலங்குகளிடம் இருந்து பயிரைக் காத்தோம், இப்போது இந்த மனிதர்களிடம் இருந்து காக்க வேண்டியுள்ளது” என அவர் வேதனையுடன் கூறுகிறார். லைக்குகளுக்காகவும், வியூஸ்களுக்காகவும் ஒருவரின் உழைப்பைச் சிதைக்கும் இவர்களின் செயலைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
