மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தின் நிம்பா கிராமத்தில், சிறுவன் ஒருவன் மீது போலிச் சாமியார் ஒருவர் உயிருக்கு ஆபத்தான முறையில் அமானுஷ்ய சிகிச்சை (அகோரி) செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிம்பா கிராமத்தில் உள்ள ‘பைரம் புவா’ என்ற வழிபாட்டு மையத்தில், சிறுவன் ஒருவனுக்குத் தீய சக்திகளை விரட்டுவதாகக் கூறி அமானுஷ்ய சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன. வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்தச் சிறுவனின் உயிரைப் பணையம் வைத்து, மிகவும் ஆபத்தான மற்றும் கொடூரமான முறையில் அந்தப் போலிச் சாமியார் சிகிச்சை அளிப்பது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.

மூடநம்பிக்கையின் பிடியில் சிக்கிய மக்கள், குழந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இத்தகைய செயல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து,  காவல்  உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் ஜி.குட்டே இது குறித்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், இந்த வீடியோ சுமார் ஓராண்டு பழமையானது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருதி, ஏப்ரல் 16-ஆம் தேதி சம்பந்தப்பட்ட வழிபாட்டு மைய நிர்வாகிகளுக்குப் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது, தெய்வீக சக்தி, அற்புதங்கள் அல்லது எதிர்காலத்தைக் கணிப்பதாகக் கூறி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களைத் திசைதிருப்புவது சட்டப்படி குற்றமாகும். மகாராஷ்டிராவில் அமலில் உள்ள ‘நரபலி மற்றும் அமானுஷ்ய சடங்குகள் தடுப்புச் சட்டம் 2013’-ன் கீழ் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது அந்த வழிபாட்டு மையத்தின் நிர்வாகிகள் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டு, இத்தகைய அமானுஷ்ய முறைகளை இனி கடைபிடிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.