எக்ஸ் (X) வலைதளத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, வனவிலங்குகளின் வாழ்வாதாரப் போராட்டத்தை மிகத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மலை உச்சியில் நின்று கொண்டிருந்த காட்டெருமை ஒன்றைச் சிங்கம் ஒன்று மிக ஆக்ரோஷமாக வேட்டையாட முயல்கிறது. காட்டெருமையின் கழுத்துப் பகுதியைச் சிங்கம் கவ்விப் பிடித்தபடி இருக்க, எங்கும் தப்ப முடியாது என்ற இக்கட்டான சூழலில் காட்டெருமை இருந்தது. ஆனால், அந்த மரண பயத்திலும் மிகச் சமயோசிதமாகச் செயல்பட்ட அந்த காட்டெருமை, சட்டென மலை உச்சியில் இருந்து கீழே வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றுத் தண்ணீரில் குதித்தது.

​இந்தத் திடீர் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத சிங்கம், காட்டெருமையைப் பிடிவாதமாகக் கவ்வியிருந்ததால் அதனுடன் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், பிடி நழுவிச் சிங்கம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால், தண்ணீருக்குள் குதித்த வேகத்தில் லாவகமாகச் செயல்பட்ட காட்டெருமை, துரிதமாகக் கரை ஏறித் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தப்பியோடியது. வேட்டையாட வந்த சிங்கத்திற்கே ‘தண்ணி காட்டிய’ அந்த காட்டெருமையின் துணிச்சல் மற்றும் புத்திசாலித்தனம் இணையத்தில் பலரையும் வியக்க வைத்துள்ளது.