தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணை மற்றும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மூலம் பாஜக அவருக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
விஜய்யை மிரட்டி தேர்தல் உடன்படிக்கை செய்து கொள்ள பாஜக முயற்சிப்பதாகவும், அதற்கு விஜய் சம்மதித்தால் அவர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் செல்வப்பெருந்தகை கூறினார்.
“விஜய் இப்போது சிங்கத்தின் வாயில் சிக்கிய கதையாக இருக்கிறார், என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சு நாகரீகமற்றது என்றும், தமிழக மண்ணில் பாசிச சக்திகளை இந்தியா கூட்டணி நுழைய விடாது என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசிய அவர், கூட்டணிக் கட்சிகளுக்குள் சில மாற்றுக் கருத்துகள் இருக்கலாம், ஆனால் அதை இரு கட்சிகளின் தலைமைகளும் பேசி முடிவெடுக்கும் என்றார்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் வெளிப்படையான அரசியலையே செய்யும் என்றும், கூட்டணி பேச்சுவார்த்தைக்காகத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெறும் பள்ளி விழா மற்றும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதாகவும் அவர் தகவல் பகிர்ந்தார்.
