எண்கள் அல்லது மதிப்பெண்கள் ஒருவரது தலைவிதியைத் தீர்மானிப்பதில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு இந்திய மென்பொருள் பொறியாளரின் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளியில் சராசரி மாணவராக இருந்த இவர், கல்லூரி முதலாம் ஆண்டிலேயே அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்தார்.
அடுத்தடுத்து வந்த தேர்வுகளிலும் தோல்வி, மன அழுத்தம், மற்றும் கடுமையான சிறுநீரக நோய் எனப் பல சோதனைகள் இவரைச் சூழ்ந்தன. ஒரு கட்டத்தில் எல்லாம் முடிந்துவிட்டது என்று தோன்றினாலும், அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை.
கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, சொந்தமாக யூடியூப் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கோடிங் கற்கத் தொடங்கினார். ஒரு நல்ல கல்லூரியில் பட்டம் இல்லாவிட்டாலும், திறமையை வளர்த்துக்கொண்ட இவருக்கு 2023-ல் ஒரு வேலை கிடைத்தது.
ஆனால், ஐந்தே மாதங்களில் அந்த வேலையை விட்டு அவர் நீக்கப்பட்டார். மீண்டும் ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்தாலும், துவண்டு போகாமல் தொடர்ந்து நேர்காணல்களில் பங்கேற்றார்.
பல நிராகரிப்புகளுக்குப் பிறகு, அக்டோபர் 2025-ல் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ஆண்டுக்கு 21 லட்சம் ரூபாய் சம்பளத்தில் அவருக்கு வேலை கிடைத்தது.
தற்போது 25 வயதாகும் அந்த இளைஞர், தனது வெற்றிக் கதையை ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். “பல்கலைக்கழகத் தேர்வுகளில் தோற்றபோது என்னை ஒரு தோல்வியுற்றவனாகக் கருதினேன், ஆனால் இன்று இந்த நிலையை அடைந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடின உழைப்பும், தொடர்ச்சியான கற்றலும் இருந்தால் எந்தப் பின்னடைவிலிருந்தும் மீண்டு வரலாம் என்பதற்கு இவரது வாழ்க்கை ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.
